Friday, February 22, 2008

எங்கள் ஊர் பெரியகுளமும், பெரியகுளத்து மலையும்

"வடக்குத்திசை பழனி வான் கிழக்குத் தென்காசி குடக்குத்திசை கோழிக்கோடாம் கடற்கரை ஓரமே தெற்காகும் உள் எண்பது காதம் சேரநாட்டு எல்லை எனச்சிறப்பு" என்று மஞ்சு தவளும் மலையாளதேசத்தை வரையறுத்த வரலாறு, புள்ளினங்கள் துள்ளி விளையாடும் தென்காசிச் சீமையையும் விட்டுவைக்கவில்லை. இயற்கை அழகு இதயத்தைக்கொள்ளை கொள்ளும் குற்றாலமலையின் தொடர்ச்சியாக வடக்கு நோக்கிச் செல்லும் மேற்குத்துதொடர்ச்சி மலையின் முழங்காலுக்கு அருகில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய தேசத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாய் இருப்பது தான் எனது கிராமம். அனைத்து மதத்தவரும், அனைத்து சமூகத்தவரும் சகோதர சகோதரிகளாய் குலவுகின்ற காட்சியை என் குக்கிராமத்தில் தான் பார்க்கமுடியும். ஊர் மக்களின் ஒட்டுமொத்த சொத்தாக இருப்பது எங்கள் ஊர் பெரியகுளமென்றால் மிகையாகாது.பெரியகுளம், பெயருக்கேற்ப பெரியகுளம் தான். திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாவது பெரியகுளம் என்று கூறப்படும் இந்தப் பெரியகுளம் தான், எங்கள் ஊரைச் சுற்றியுள்ள அருணாசலபுரம், அரியநாயகிபுரம் உள்ளிட்ட ஏறத்தாழ 7, 8 கிராமங்களில் வாழும் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். கிழக்கே பெரியமலையையும், தெற்கே கொடிக்கட்டாம் பாறையயும், மேற்கே அருணாசலபுரத்து கோணாம்பொட்டலையும், வடக்கே வடநத்தம்பட்டியையும் (மேட்டு நிலத்தில் உள்ள வீடுகள்) எல்கையாகக் கொண்டது. குளத்தில் ஏறத்தாழ 90 சதவீதம் கருவேல் மரங்கள் தான் அடர்ந்திருக்கும். இந்தக் கருவேலமரங்களை யாராவது வெட்டிவிடக்கூடாது என்பதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு காவலர்களும் உண்டு. அதில் ஒருவர் எப்போது ஒரு பெரிய பாளை அருவாளோடு குளத்தைச் சுற்றிவருவதை எனக்கு விபரம் தெரிந்த வயதிலிருந்து இன்றுவரை பார்க்கிறேன். ஆனாலும் அவர் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக கருவேல்மரப் பட்டைகளை நமது கற்கால நவீன தொழில் முனைவோர்கள் உரித்துவிடுவந்தும் உண்டு. கசாப்புக்கடையில் தோலுரித்த ஆடு தொங்கிக்கொண்டிருப்பதைப்போல பட்டை உரிக்கப்பட்ட மரங்கள் அப்பாவியாக நின்றுகொண்டிருப்பதை கண்மாய் வழியாக அருணாசலபுரத்திற்கு நடந்து செல்லும்போது பலமுறை பார்த்திருக்கிறேன். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் ஊரில் சினிமாக் கொட்டகை (ஸ்ரீ முருகன் திரை அரங்கம்) இருக்கும் போது அருணாசலபுரம், அரியநாயகிபுரம், அச்சம்பட்டி, பெரியசாமிபுரம் மற்றும் பல ஊர்களைச் சார்ந்த அன்பர்கள் திரைப்படம் பார்க்க இந்தக் கண்மாய் வழியாகத்தான் வந்து போவார்கள். ஒரு 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளி என்றால் வீரசிகாமணி அரசு மேல்நிலைப்பள்ளி தான் (இது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் தான் மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது). ஆக எங்கள் ஊரைச் சுற்றியுள்ள மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்துபோக நடைபாதையாய், வசதியாக இருந்ததும் இந்தப் பெரியகுளம் தான்.மனிதர்கள் மட்டுமின்றி, குளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் ஆடு மாடுகளுக்கு மேச்சல் நிலமாகவும், ஒரு காலத்தில் நிலமற்ற விவசாயிகள் குளத்து ஓரம் உள்ள புறம்போக்கு நிலத்தில் வெள்ளரிக்காய் பயிரிட்டு வயிற்றைக் கழுவுவதற்கு வசதியாக இருந்ததுவும் இந்தப் பெரியகுளம் தான். உயிரியல் பாடத்தில் தவளையை வெட்டி செய்முறை செய்ய, தவளை பல தானம் செய்ததுவும், தாவரவியலில், மியுஸேசி, யுபோர்பியேசி தாவரங்களின் மாதிரியை சேமிப்பதற்கு செடிகள் பலதந்ததுவும், என்.சி.சி மாணவர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சி எடுப்பதற்கு தனது தெற்குச்சுவரை சிறம் தாழ்த்தித் தந்ததுவும் எங்கள் ஊர் பெரியகுளம் தான்.நான் சிறுவனாக இருந்தபோது எனது செல்லம்மாவின் (அம்மாவின் அம்மா, தி.முருகம்மாள்) கைகளைப் பிடித்துக்கொண்டு கண்மாய் வழியாக அருணாசலபுரத்திலிருந்து நடத்து கொடிக்கட்டாம்பாறையில் கரை ஏறி வீரசிகாமணிக்கு வருவது எனக்கு ஒன்றும் புதிதாக இருந்ததில்லை. அப்படி நடந்து வரும்போது பெரிது பெரிதாக இருக்கும் பொந்துகளைப் பார்த்து அஞ்சி நடுங்கி செல்லம்மையின் முந்தானைக்குள் முகம் பதித்து அழுததும், யாராவது எரு பொருக்குவதற்கு சாக்குப்பையோடு வந்தால் பிள்ளைபிடிப்பவன் தான் வருகிறான் என்று அலறி அடித்து ஓடி கருவேல் மரத்தூருக்குள் ஒளிந்ததும், செல்லம்மை யாருக்கும் தெரியாமல் வாங்கிகொடுக்கும் இரண்டு மசால் கடை முருக்கை நடுக்கண்மாயில் வந்து பிரித்து திண்பதும், தோல்ச்செருப்பும் தூக்குச்சட்டியுமாய் ஆடு மேய்க்கும் அன்பர்களைப் பார்த்து அகலக் கண்விரித்ததும், நடந்து வரும்போது உடைந்த ஒலிப்பேழை மாதிரி திரும்பத் திரும்ப நான் ஆனா, ஆவன்னா சொல்வதைக் கேட்டு என் செல்லம்மை சிரிக்கும் சிரிப்பும், நான் காலில் செருப்பு போட்டிருந்தாலும் ஒருகைக்கு ஒண்டிகடை முருக்கும், இன்னொரு கைக்கு ஜனதா கடை பூந்தியும் வாங்கிக்கொடுத்து என்னைத் தோழில் தூக்கிவரும் என் தாத்தா, அத்தி பூத்தாற்போல் எப்போவாவது நடைபாதையில் பயந்து ஓடும் முயல்க்குட்டிகள், மாலை மசங்கும் வேளையில் கோணாம்பொட்டலிலிருக்கும் இரட்டைப்புளியமரத்தைப் பார்த்து சடாமுனி இருக்கிறது என்று பயந்து பயந்து செல்லம்மையின் கைகளை இருக்கிப்பிடித்துக்கொண்டு நடந்ததும் பெரியகுளம் என்றபோது என் கண்களைக் குளமாக்கிய சிறுவயது ஞாபகங்கள்.அரும்புமீசை முளைத்த வயதில் மஞ்சள் பூசும் முற்றாத இளம்பெண்களின் கணுக்கால் பார்த்து ரசித்ததும், விறால் மீன் பிடிக்கும் ஆசையோடு, நான்கு மணிநேரம் போராடி கையில் கிடைத்த ஒரு மீனையும் பாம்பு என்று பயந்துபோய் மீண்டும் குளத்துக்குள்ளேயே போட்டுவிட்டு அரைகுறை ஆடையோடு அலறிக்கொண்டு கன்னிமாரம்மன் கோவிலில் போய் விக்கி போட்டு மன்னிப்புக்கேட்டதும், பம்பாய் படம் பார்த்துவிட்டு ஆடி மாதம் வேகமாக வீசிய தென்மேற்கு பருவக்காற்றையும் பொருட்படுத்தாமல், அரவிந்தசாமி போல் இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு, மூக்கு வழியாகவும், வாய்வழியாகவும் செம்மண்புழுதி தொண்டையை அடைத்தபோதும் சற்றும் மனம் தளராமல் கொடிக்கட்டாம் பாறையில் தென்மேற்குத்திசையில் நிண்றுகொண்டு, முகத்தில் வீசிய செம்மண்ணையும் பொருட்படுத்தாமல் உயிரே...உயிரே பாட்டைப்பாடி ரசித்ததும், குளத்துக்கரை அருகில் பொந்துக்குள் இருந்த சாரைப்பாம்பைப் பார்த்துவிட்டு பின்னங்கால் தலையில் அடிக்குமளவுக்கு வேகமாக ஓடி முக்கு ரோட்டில் போயி திரும்பிப்பார்த்து அப்பாட! என்று பெருமூச்சு விட்டு எதுவும் நடக்காதது போல் ஊருக்குள் நடந்து சென்றதும் பெரியகுளத்தோடு மறக்கமுடியாது மலரும் நினைவுகள்.பெரியகுளத்திற்கே பெருமை சேர்க்கும் பெரியமலை வரலாற்றுச் சிறப்புமிக்கது. எமதர்மராஜாவின் கணக்காளராகப் பணியாற்றுவதாக நம்பப்படுபவர் திருவாளர்.சித்திரபுத்திர நயினார். இவர் சித்திரை மாதம் முதல் தேதி பிறந்ததாக நம்பப்படுகிறது. அவர் பிறந்த சித்திரைமாதம் முதல் தேதி அன்று நயினார் நோன்பைக் கொண்டாடும் விதமாக குறிப்பாக அருணாசலபுரம், அரியநாயிபுரத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும், பெரும்பாலும் இளவயதினர், அவலையும் சர்க்கரையையும் மலைக்குக் கொண்டுவந்து தின்பார்கள். அதற்கான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் குறைந்தது 4, 5 காதலர்கள் கண்டிப்பாக ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வார்கள். இதை ஒரு சந்திப்புமுனையாக வைத்திருப்பார்களோ என்னவோ?. தற்போது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.ராமாயாணத்தில் சொல்லப்பட்ட ராமர் வனவாசத்தின் போது ராமரும் சீதாதேவியும் வீரசிகாமணி மலையில் தங்கியதாக அல்லது வந்துபோனதாக ஊர்ஜிதம் செய்கிறார்கள். இதை உறுதி செய்யும் வகையில், மலையின் நடு அடுக்கில் மேற்குப்புறம் ராமர் பாதம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. அதோடு பழங்காலத்துக் கல்வெட்டு ஒன்றும் (என்ன மொழியில் என்று எனக்குத் தெரியவில்லை) பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கல்வெட்டிற்கு சற்றே வடக்குப்புறம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வியாபாரம் செய்ததாகக் கூறப்படும் இடத்தில் இன்னும் மண்வாசம் மாறவேயில்லை என்பது ஆச்சரியம்.ராமர் இந்த மலைக்கு வந்திருக்கிறார் அல்லது தங்கியிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய நிகழ்வுகளைக் காட்டலாம். முதலாவதாக, வீரசிகாமணியிலிருந்து ஏறத்தாழ தென்கிழக்குத்திசையில் மாயமான்குறுச்சி என்ற கிராமம் இருக்கிறது. இங்கிருந்து இலங்கைக்கு திருச்செந்தூர் (திருச்சீரலைவாய் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது) வழியாக குறுக்காகச் செல்லமுடியும். ஆகவே, ராவணன் மான் வேடமிட்டு வந்ததுதும், கதைப்படி அது மாயமாக மறைந்ததும் இந்த இடத்தில் தான் என்பதை மெய்ப்பூட்டும் வகையில் மாயமான்குறுச்சி என்று பெயரிடப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மாயமான்குறுச்சியின் தென்மேற்கில் உள்ள ஆலங்குளத்து மலை உச்சியில் பழமையான ராமர்கோவில் உள்ளது என்பது கொசுறு செய்தி. அடுத்ததாக, ராமாயணக்கதைப்படி, வானரங்களுக்கும் சாம்பவர்களுக்கும் சண்டை ஏற்பட்டதாம் (தவறு எனில் தயவுசெய்து திருத்தவும்). அப்படிச் சண்டை நடந்தபோது சாம்பவர்கள் வடபுறமாகவும், வானவர்கள் தென்புறமாகவும் நின்று சண்டையிட்டார்களாம். அப்படி சாம்பவர்கள் வடபுறமிருந்து சண்டையிட்ட இடத்தை சாம்பவர்வடகரை என்று அழைத்ததாகவும் கதைகள் கூறப்படுகின்றன. அந்த சாம்பவர்வடகரை வீரசிகாமணியிலிருந்து தென்மேற்கில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. சாம்பவர்வடகரை அருகே செல்லும் நதியை அனுமான் நதி என்று அழைக்கிறார்கள். அனுமான் சீதையைத்தேடி நடந்துவரும்போது அவர் வால்பட்ட இடம் தான் நதியாக மாறிவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆக, வீரசிகாமணி பெரியகுளத்து மலைக்கு ராமர் வந்ததாகக் கூறப்படும் தகவலை நம்பலாம்.இதைத் தொடர்ந்து, மஹாபாரத்தில் கூறியதுபோல பஞ்சபாண்டவர்களும் வனவாசத்தின் போது தங்கள் பத்தினியோடு பெரியகுளத்து மலையில் தங்கியதாகவும் நம்பப்படுகிறது. அதையும் உறுதிப்படுத்தும்வகையில் ஆறுபேர் படுத்துத் தூங்குவதற்கு வசதியாக கல்லால் செதுக்கப்பட்ட உறைவிடமும், அங்காங்கே சிறு தடாகங்களும் இருக்கின்றன. கூடுதலாக இரண்டாயிம் ஆண்டுக்கு முன்பாக மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட சிவன் கோவிலில் பஞ்சபாண்டவர்களின் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்தக்கோவிலின் பெருமையை அறிந்து, எனது கிராமத்தைச் சுற்றிப் படப்பிடிப்புக்கு வந்த அர்ஜூன், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட முதல்வன் படிப்பிடிப்புக் குழுவினர் இக்கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர்.மேலும், இந்தமலையின் உச்சியில் நிறுவப்பட்டுள்ள ஆளுயரக்கல்லில் திருக்கார்த்திகை அன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியிலிருந்து கிழக்குநோக்கிப் பார்த்தால் சங்கரன்கோவில் பெரியகோவில் கோபுரத்தைப் பார்க்கலாம். தவிர சுற்றி உள்ள கிராமங்களில் இயற்கை அழகையும் இங்கிருந்தே ரசிக்கலாம். மலையில் மேல்புறம் பாழடைந்த குகை இருக்கிறது. அதிலிருந்து குளிர்ச்சியான காற்றும் வருகிறது. ஆகவே, இந்தக்குகை எங்கோ திறந்தவெளியில் முடிவடைகிறது அல்லது எங்கோ தொடர்கிறது என்றும் எண்ணத்தோன்றுகிறது. வீரசிகாமணி மலைக்கும் சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவிலுக்கும் இடையே ஒரு குகை இருப்பதாக எங்கள் ஊர் பெரியவர்கள் கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.இந்தக் குகையில் தான் கொள்ளைக்கார தங்கையா என்பவர் தங்கியிருந்தார் என்றும் அதன் தாக்கமே கும்பக்கார தங்கையா என்ற திரைப்படம் என்றும் சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மலையின் கீழ்புறம் களத்துமேட்டிற்கு வசதியாக சற்று சமதளமான இடம் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு பெரும்பாலும் இங்கு தான் வயலில் விளைந்த நெல், சோளம், கேழ்வரகு மற்றும் கம்பு போன்ற தானியங்களை அடித்து, தூற்றி, புடைத்து சாக்குகளில் கட்டி மாட்டுவண்டியில் ஏற்றி வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள். தற்போது அது ஒரு கனாக்காலம் தான்.கம்பீரமாய்க் காட்சிதரும் மலையில் தென்புறம் மேட்டு மடையும் (மேட்டு நிலத்தில் இருப்பதால் மேட்டுமடை எனப்பெயர்), வடபுறம் பெரியமடையும் இருக்கிறது. பெரியமடைக்கும் மலைக்கும் இடையே ஏழுகன்னிகள் வரிசையாக வீற்றிருக்கும் கன்னிமாரம்மன் கோவில் இருக்கிறது. மேட்டுமடை வரை தண்ணீர்வந்தால் குளத்தில் 90 நாட்கள் வரை பெரியமடையிலிருந்து தண்ணீர் விநியோகிக்கமுடியும். நிறைகுளம் தழும்பினால் குளம் உடைத்துபோகாமல் இருக்க, தெற்கே உள்ள கொடிக்கட்டாம் பாறையில் மாறுகால் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த மாறுகாலுக்கு அருகே தமிழிலான பல கல்வெட்டுக்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. பெரியகுளம் நிரம்பினால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மழைபெய்யாவிட்டால் கூட வீரசிகாமணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் செழிப்பாகவே இருக்கும்இப்படி வாய்கிழியப் பெருமை பேசினாலும், எங்கள் ஊர் குளம் 10 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த வருடம்தான் முழுவதும் நிரம்பியது. அதற்கு குறிப்பாக இரண்டு காரணங்கள். ஒன்று, பருவமழை பொய்த்துப்போனது. இரண்டாவது, கருப்பாநதி அணையில் உள்ள தண்ணீர், ஏழு கடல் ஏழுமலைக்கு அப்பால் இருக்கும் ராஜகுமாரிபோல், 14 மடைகள் தாண்டி கடைசியாக எங்கள் ஊர்குளம் வரும்போது அணைமட்டம் குறந்துவிடும். அதிகாரிகள் அணையை அடைத்துவிடுவார்கள். எங்கள் ஊர் விவசாயிகள் வானம்பார்த்த பூமியாய்த்தான் வாழ்க்கை நடத்திவருகிறார்கள். கால்வாயை அகலைப்படுத்துவதற்கும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் நூறு வயதை நெருங்கியபோதும் இன்றும் மனம் தளராமல் எங்கள் ஊர் குளத்திற்காக மேதகு. குடியரசுத்தலைவர் அவர்கள் வரை தொடர்ந்து மனுக்கள் அனுப்பி எங்களை வாழ வைத்துக்கொண்டிருப்பவர். உயர்திரு. சி. மாணிக்கவாசகம் பிள்ளை ஐயா அவர்கள் தான். அவருக்கு நான் இனிவரும் எல்லா ஜென்மங்களிலும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.